Monday, December 7, 2015

கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?


 கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?




தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள்  கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா  தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.

ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.  உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல்  பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.

வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.  PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION  யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.

2 comments:

  1. அருமை நண்பரே சாட்டையடி போன்ற வேள்விகள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை ஜெயசீலன். எப்படியோ தங்கள் பதிவுகளை மிஸ் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள்...

    ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம். // உண்மையே. அரசுதான் செய்திருக்க வேண்டுமே அல்லாமல் அதனால்தான் ஏகப்பட்டக் குழப்பம். தன்னார்வலர்கள் அதிகம் இருந்தும் ஆர்கனைஸ்டாக இல்லாமல் போனது. பல பகுதிகளுக்குச் சென்றடையாமல் போனது. பகுதிவாரியாகப் பிரிந்து என்ன பொருட்கள் தேவை என அறிந்து செய்திருக்க வேண்டியது/.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. ஆம். ஒருங்கிணைப்பி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே....

    நல்ல பதிவு ...

    ReplyDelete